கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிவேகமாக இயக்கப்படும் திறன் கொண்ட ரயில் இதுவாகும். அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ரயில்கள் தயாரிக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயமானது மிகவும் குறைவு என்று ரயில்வே நிர்வாகம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை-மைசூரு, கோவை-சென்னை, சென்னை-திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தொழில் நகரங்கள் என குறிப்பிடப்படும் கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் மத்தியில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
அதிகாலை 5 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது
அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே சார்பில் வரும் 30ம் தேதி முதல் கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, இந்த ரயில் சேவையினை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, சேலம், ஓசூர் வழியே காலை 11.30 மணியளவில் வந்தே பாரத் ரயில் சென்றடைந்துள்ளது. மீண்டும் அங்கிருந்து மதியம் 1.40க்கு புறப்பட்டு இரவு 8 மணியளவில் கோவை வந்தடையும் என்று தெரிகிறது.