கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு
தென் உள் கர்நாடகாவில்(SIK) வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால், நேற்று பெங்களூரில் கடும் கனமழை பெய்தது. இதன் விளைவாக பெங்களூரில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதுடன், நகரம் முழுவதும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பெங்களூரில் தொடங்கிய கனமழை, நேற்று இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. இதற்கிடையில், வரும் வியாழன் வரை கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. மேலும், தென் உள் கர்நாடகாவிற்கு(SIK) புதன்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கையும், கடலோர கர்நாடகாவுக்கு செவ்வாய்க்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
முழங்கால் அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பெங்களூருவில் மெஹ்கிரி சர்க்கிளில் இருந்து ஹெப்பால் வரையிலான பல்லாரி சாலை, சாங்கி சாலை, குட்டஹள்ளி மெயின் ரோடு, ஜே.சி.நகர் மெயின் ரோடு, சி.வி.ராமன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடக்கு பெங்களூரில் இருந்து வரும் வாகனங்களால் மணிப்பால் மருத்துவமனை, ஹெப்பால் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர்(போக்குவரத்து, வடக்கு) சச்சின் கோர்படே தெரிவித்தார். சர்ஜாபூர் சாலை, சில்க் போர்டு சந்திப்பு, ஓசூர் சாலை, வெளிவட்ட சாலை, கஸ்தூரி நகர் அருகே உள்ள வெளிவட்ட சாலை, பழைய மெட்ராஸ் சாலை ஆகிய இடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இன்று காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
பல பகுதிகளை பாதித்த வெள்ளம்
கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. பானஸ்வாடி மெயின் ரோடு, குயின்ஸ் சர்க்கிள், கல்யாண் நகர் 80 அடி சாலை (கல்யாண் நகர் சுரங்கப்பாதைக்கு அருகில்), அனில் கும்ப்ளே சர்க்கிள், தின்னூர் மெயின் ரோடு, ஜெயமஹால் மெயின் ரோட்டில் உள்ள சிக்யுஏஎல் கிராஸ், வித்யாஷில்ப் மேம்பாலம் மற்றும் அண்டர்பாஸ் சர்வீஸ் சாலை, லால்பாக் மெயின் கேட், உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், ஸ்ரீராம்பூர் மற்றும் லிங்கராஜபுரம் சுரங்கப்பாதைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கின.
நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்ட துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திங்கள்கிழமை நள்ளிரவு ஹட்சன் சர்க்கிளில் உள்ள புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) தலைமை அலுவலகத்தின் போர் அறைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். கடுமையான மழையைத் தொடர்ந்து நகரில் நடக்கும் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவர் மேற்பார்வையிட்டார். தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தான் பெங்களூரில் தீவிர மழை பெய்வதாக பெங்களுருவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் A பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பெங்களூரில் பெய்து வரும் மழையால் நகரின் தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.