LOADING...
உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம் இது மட்டும்தான்!
10 விமான நிலையங்களில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம்

உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம் இது மட்டும்தான்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2025
08:59 am

செய்தி முன்னோட்டம்

நியூயார்க் நகரத்தில் இருந்து வெளியாகும் பிரபல அமெரிக்க பயண இதழான 'Travel + Leisure, 2025'-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. உலகளாவிய வாசகர்களிடையே நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.80 லட்சம் பேர் பங்கேற்ற இந்த கருத்துக் கணிப்பில், 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பட்டியலில், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) 84.23 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய விமான நிலையம் இதுவாகும்.

விமான நிலையங்கள்

பட்டியலில் இடம் பெற்ற டாப் விமான நிலையங்கள் 

2025-ம் ஆண்டின் பட்டியலில் முதலிடத்தை துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 98.57 புள்ளிகளுடன் கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மற்றும் கத்தாரின் தோஹா நகரத்தில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் ஆகியவை முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இந்த பட்டியல் உலகளாவிய பயணிகள் தரமான சேவை, வசதிகள், சுகாதாரம் மற்றும் பயண அனுபவங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.