சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு
இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு பொது இடங்களில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட்டனர். அதன்படி சென்னையில் 1,500க்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்களில் வைத்துள்ள நிலையில், தற்போது அதனை கரைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(செப்.,23) முதலே இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கும் பணி துவங்கிய நிலையில், இன்று 2வது நாளாக இந்த நிகழ்வு நடக்கவுள்ளது.
மொத்தம் 22,080 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
அதன்படி, பிரம்மாண்ட சிலை கரைப்புகளுக்கு ஏதுவாக பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் ட்ரோலி மற்றும் கிரேன் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட இந்த 4 கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 22,080 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிலை கரைப்பு நிகழும் பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாடு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள், ராட்சத கிரேன்கள், உதவி மையங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.