ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆன்லைன் முன்பதிவு திட்டம் குறித்த கருத்துக்கள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுள்ளது. இதுகுறித்தது அரசு போக்குவரத்துக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:- "பயணிகளுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாள்தோறும் சராசரியாக 2,500 பேருந்துகளில் பயணிகள் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக 150 படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பேருந்துகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக அறிக்கையின் தொடர்ச்சி
தொலைதூர மற்றும் புறநகர் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்தை www.tnstc.in என்ற இணையதளத்தையும் டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ மொபைல் செயலியையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை அதிக மக்கள் பயன்படுத்தி பயணம் செய்ய ஏதுவாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக வரவேற்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ptcsoffice2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.