
பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு உரிய விளக்கம் வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
#NewsUpdate | காகிதம் விலை, மேல் அட்டை விலை மற்றும் அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது. லாப நோக்கத்திற்காக அல்ல
— Sun News (@sunnewstamil) August 14, 2024
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… pic.twitter.com/yQ7xk4NLUo
அறிக்கை
இலவச பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் உறுதி
அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த அறிக்கையில் மேலும், விலையேற்றம் இருந்த போதும், தமிழகத்திலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது எனத்தெரிவித்தார்.
அதோடு, மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.