திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்; வட்டார கல்வி இயக்குனர்களுக்கு பறந்த மெமோ
தமிழ்நாடு முழுவதும் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் புகார்கள், நிர்வாக புகார்களின் தொடர்ச்சியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளில் வகை 14/-ன்கீழ் வரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி மாறுதல் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. "மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும்" எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டார கல்வி இயக்குனர்களுக்கும் பறந்த உத்தரவு
ஏற்கனவே இருக்கும் உத்தரவின் படி ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை ஆய்வு செய்திட வேண்டும். ஆனால், வெறும் 5, 6 பள்ளிகளை மட்டுமே ஆய்வு செய்த 350 வட்டார கல்வி இயக்குனர்களுக்கு மெமோ வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் மாணவர்களிடம் உரையாடி அவர்களின் குறைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளின் உள்கட்டமைப்பு பற்றியும், அதனை தீர்க்க பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பற்றியும் அறிக்கை சமர்ப்பிக்கபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.