Page Loader
போலீசாரின் மன நலனை உறுதி செய்ய 'மகிழ்ச்சி' திட்டம்: தமிழக டிஜிபி அறிவிப்பு
போலீசாரின் மன நலனை உறுதி செய்ய 'மகிழ்ச்சி' திட்டம்

போலீசாரின் மன நலனை உறுதி செய்ய 'மகிழ்ச்சி' திட்டம்: தமிழக டிஜிபி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2025
08:11 am

செய்தி முன்னோட்டம்

மன அழுத்தம், மதுபழக்கம், குடும்பத் தகராறு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கிய போலீசாருக்குத் தேவையான உதவிகளை வழங்கும் வகையில், 'மகிழ்ச்சி' என்ற மனநல திட்டம் தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: போலீசாரின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்குடன் 'மகிழ்ச்சி' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணம், ஆன்லைன் சூதாட்டம், பதற்றம், துக்கம், திருமண முரண்பாடு, கோபம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தத் திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மனநல மையங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் இணைந்து, தேவையான போலீசாருக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவரங்கள்

கவுன்சிலிங் உதவி எண்கள் அறிவிப்பு

இந்த மாதத்தின் துவக்கம் வரை எடுக்கப்பட்ட கணக்குப்படி, சென்னை, மதுரை மற்றும் திருவாரூர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் மூன்று மையங்களின் மூலமாக 2,844 போலீசாருக்கு இத்திட்டம் பயனளித்துள்ளது. இதில் 1,884 பேர் ஆண்களும், 960 பேர் பெண்களும் உள்ளனர். 'மகிழ்ச்சி' திட்டம் போலீசாருக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதுடன், அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், வாழ்க்கைத் தரத்தையும் பணித்திறனையும் மேம்படுத்தவும் நோக்கமுடையதாகும். இதனைப் பற்றி காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொலைபேசி உதவி எண்களாக சென்னை - 6380977682, மதுரை - 7305033041, திருவாரூர் - 9342189898 மற்றும் கோயம்புத்தூர் - 9500334416 என நான்கு மையங்களுக்கான எண்ணுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post