விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மானிய கோரிக்கை தாக்கல் இம்மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூன் 24ஆம் தேதி மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதனால், மானிய கோரிக்கை கூட்டம் முன்கூட்டியே தொடங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன் படி வரும் ஜூன் 20ஆம் தேதி மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கவுள்ளது.
அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம்
இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், 20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என்றும், அன்றைய தினம் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்து, 21ஆம் தேதி மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும், அன்றைய தினம் முதல் தமிழக சட்டப்பேரவை காலை மாலை இருவேளைகளில் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்தார். பின்னர், 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீர்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை, சுற்றுச்சூழல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.