
வீடு தேடி ரேஷன் வழங்கும் புதிய திட்டம் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைத்தாரர்களுக்காக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக அத்தியாவசிய பொருட்களை வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று முதல் சோதனை முறையில் தொடங்கி வைத்துள்ளது. நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிரமப்படுபவர்களுக்கு, பொது விநியோக முறையின்(PDS) கீழ் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் சோதனை முயற்சி இன்று(ஜூலை 1) முதல் ஜூலை 5 வரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது. 10 மாவட்டங்களில் சோதனையோட்டம்: சென்னை திருநெல்வேலி சிவகங்கை திண்டுக்கல் ராணிப்பேட்டை ஈரோடு தர்மபுரி நாகப்பட்டினம் நீலகிரி கடலூர் கூட்டுறவுத்துறையால் மேக்ஸி லாரிகள், மினி லாரிகள் மற்றும் வேன்கள் போன்ற பல்வேறு வாகனங்களைப் பயன்படுத்தி விநியோகிக்கப்படும்.
விவரங்கள்
திட்டத்தின் நோக்கம் மற்றும் விவரங்கள்
மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க, 2.25 கோடி ரேஷன் அட்டைத்தாரர்கள் கைரேகை பதிவு மூலம் வாங்கி வருகிறார்கள். இதில், மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், நேரில் வர இயலாத நிலை காரணமாக, பிறரை அனுப்பி வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த சிக்கலை தீர்க்கவே, அரசு தற்போது வீடு தேடி ரேஷன் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டத்தில், இந்தத் திட்டம் சுமார் 15 லட்சம் ரேஷன் கார்டுகளை உள்ளடக்கும். இது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினர்களும் இல்லாத மாற்றுத்திறனாளிகளை (PwDs) கொண்ட அட்டைதாரர் குடும்பங்களை மையமாகக் கொண்டது.