
மீண்டும் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்த பரிசீலனை
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருப்பதால், திருமண வயதில் உள்ள பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு, தாலிக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பரிசீலித்து வருகிறது.
ஏழை பெண்களுக்கு உதவ முனைந்து, மாநில அரசு முன்பு செயல்படுத்திய 'மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டம்' உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ₹25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டதோடு, பட்டம் பெற்ற மணமகளுக்கு ₹50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அதை மீண்டும் துவக்க அரசு திட்டமிடுகிறது.
நிதியுதவி
திருமண செலவுகளை சந்திக்க திண்டாடும் ஏழைகளுக்காக மீண்டும் பரிசீலிக்கும் அரசு
சர்வதேச சந்தை நிலவரங்களை தொடர்ந்து, தமிழகத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹72,000-ஐ எட்டியுள்ளதை எதிரொலியாக, திருமண செலவுகளை ஏழை மக்கள் மேற்கொள்வது கடினமாகியுள்ளது.
இது தொடர்பாக ஒரு அரசு அதிகாரி கூறியதாவது: "திருமண வயதிலுள்ள ஏழை பெண்கள் தங்க விலை உயர்வால் கவலையில் உள்ளனர். இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, மாதம் ₹1,000-க்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உட்பட, அனைத்து ஏழை பெண்களும் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது," என்றார்.