தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் பிரபல ஆங்கில ஊடகத்தில் நேர்காணலில் பேசியுள்ளார். அப்போது அவரிடம், இந்தாண்டு ஜனவரியில் கவர்னர் உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? என்றும், முக்கிய தலைவர்கள் பெயர்களையும் கூறாமல் விட்டு விட்டீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், 2022ம்ஆண்டு சட்டசபையில் முதன்முதலாக நான் பேசுவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அதற்கு நான் கவர்னர் வரும் பொழுதும், புறப்படும் பொழுதும் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து ஆகியன இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் தேசிய கீதத்தினை இசைக்காமல் நான் அவையில் இருந்து வெளியேறும்பொழுது இசைத்தார்கள் என்று கூறியுள்ளார்.
திராவிட மாடல் என்று ஒன்று இல்லவே இல்லை - ஆர்.என்.ரவி
இதனைதொடர்ந்து அவர், அரசு தயாரிக்கும் உரையில் அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இருக்கும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் அப்படி எதுவுமில்லை. பிரச்சாரப்பொருள் தான் நிறைந்திருந்தது. சட்டம் ஒழுங்கில் தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று கூறுகிறார்கள். ஆனால் நான் அவையில் பேசுவதற்கு சிலவாரங்களுக்கு முன்னர் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சீருடையிலிருந்த பெண்காவலரை திமுக'வினை சேர்ந்தவர் மானபங்கப்படுத்தியுள்ளார். கிராமநிர்வாக அலுவலரை மணல் மாஃபியா கும்பல் அலுவலகத்திற்குள்ளேயே வைத்து வெட்டிகொன்றது. அதேபோல் கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் குண்டுவெடிப்பு போன்ற நிகழ்வுகள் நடக்கும்பொழுது தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று எப்படி நான் சொல்லமுடியும்?என்று கேள்யெழுப்பியுள்ளார். அதனையடுத்து அவர், திராவிட மாடலை நான் ஆதரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படியொரு மாடலே இல்லை, அதுவெறும் அரசியல் முழக்கம் என்று கூறியுள்ளார்.