திருப்பூர் பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது; வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்
திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு என்பவர், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டார். இந்த வழக்கில் இருவரை கைது செய்துள்ளது காவல்துறை. முன்னதாக, நேச பிரபு, மர்ம நபர்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்து இருந்தார். ஆனால் காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று அவரை மர்ம நபர்கள் பலர் சுற்றி வளைத்து கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நேச பிரபுவிற்கு உடலின் பல பகுதிகளில் ஆழமாக வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், அவர் கோவை தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலுக்கும் அரசியல் கண்டனங்கள்; 2 பேர் கைது
இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலினும் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட நேச பிரபுவுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதோடு, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்திற்கு காரணமான இருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். விசாரணையில், நேசபிரபு, திருப்பூர் அய்யம்பாளையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சபரிவிஜய் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனால், சபரிவிஜய்யின் கூட்டாளிகளான பிரவீன் மற்றும் சரவணன் இருவரும் கடந்த 3 நாட்களாக நேசபிரவுவைப் பின்தொடர்ந்து சென்று அவரைத் தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.