சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
செய்தி முன்னோட்டம்
சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையினை மீண்டும் இயக்க வேண்டும்,
சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமான சேவையினை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,31) கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 2019ம் ஆண்டு கொரோனா காலத்தின் போது சென்னை-டோக்கியோ இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் இந்த விமான சேவை துவங்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெறுவதையடுத்து மீண்டும் இந்த விமான சேவையினை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடிதம்
4 லட்ச தமிழ் வம்சாவளி மக்கள் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள்
இதனை தொடர்ந்து, சிங்கப்பூர்-மதுரை இடையே விமான சேவையினை அதிகரிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், அங்குள்ள புலம்பெயர் தமிழக மக்கள் ஆகியோர் என்னிடம் சிங்கப்பூரில் கோரிக்கை வைத்தனர்.
எனவே, அவர்களது கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமான சேவையினை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.
மேலும், சிங்கப்பூரில் சராசரியாக தமிழ் வம்சாவளியினை சேர்ந்த 4 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
அவர்கள் இன்னமும் தங்கள் சொந்த கிராமங்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார்கள்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு பணிக்கு செல்கிறார்கள் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் எடுத்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.