திருப்பதி தேவஸ்தான கோரிக்கையினை ஏற்க மறுத்த மத்திய அரசு
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத்தந்து சுவாமி தரிசனம், சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக வருடம் முழுவதுமே இக்கோயில் திருவிழா கோலமாகவே காட்சியளிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு தனி கவனத்தினை செலுத்தி வருகிறது. ஏழுமலையான் கோயிலினை சுற்றி 90 பேர் கொண்ட ஆக்டொபஸ் படையானது துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு மேல் விமானம், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியன பறக்க தடை விதித்திருந்ததாக கூறப்படுகிறது.
தீவிரவாதிகள் உளவு பார்க்கிறார்களா? என்னும் அச்சத்தில் திருப்பதி தேவஸ்தானம்
இந்நிலையில், சமீப காலங்களில் ஏழுமலையான் கோயில் மீது ராணுவ பயிற்சி விமானங்களும், விமானங்கள் உள்ளிட்டவை பறப்பது என்பது வழக்கமாகியுள்ளது என்று தெரிகிறது. மேலும், கடப்பாவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்களும் இவ்வழியே தான் செல்கிறது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று பறந்து தீவிரவாதிகள் உளவு பார்க்கிறார்களா? என்னும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதி ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளிட்டவைகள் பறக்க தடை விதிக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையினை நிராகரித்த மத்திய அரசு, மேற்கூறியவாறு தடை விதிக்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.