திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஜனவரி மாத ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி மாதம் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாளை (அக்டோபர் 19) முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. நாளை காலை 10 மணி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற மின்னணு குலுக்கல் முறை ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அட்டவணை
ஆர்ஜித சேவைகள் மற்றும் வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் அட்டவணை
தொடர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காலை 10 மணிக்குத் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகளைப் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அக்டோபர் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு இலவச அங்கபிரதட்சண டோக்கன்களும், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான தரிசன டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
அதே நாளில் மதியம் 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடும் ஆன்லைனில் தொடங்கும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு
ரூ.300 சிறப்புத் தரிசனம் மற்றும் தங்கும் அறைகள் முன்பதிவு
பக்தர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு விரைவுத் தரிசன டிக்கெட்டுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மதியம் 3 மணிக்குத் திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி அறைகளுக்கான முன்பதிவும் தொடங்கப்படும்.
ஆன்லைனில் டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ செயலியைப் பயன்படுத்தியோ அல்லது இணையதள பக்கத்தைப் பயன்படுத்தியோ தங்களது தரிசன இடங்களை உறுதிசெய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.