திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயில் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கடந்த ஜூன் 24ம்தேதி இந்த கோயிலில் திருவிழா கொடியேற்றத்தோடு துவங்கியது. இத்திருவிழா நாட்களில் காலையும் மாலையும் சுவாமி-அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து எழுந்தருளினர். மேலும் இத்திருவிழாவினையொட்டி நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், சொற் பொழிவுகளும் அரங்கேறியது. இதனையடுத்து 8ம் நாளான நேற்று(ஜூலை.,1) நடராஜ பெருமாள் வெள்ளை மற்றும் பச்சை ஆடை அணிந்து உள் பிரகாரத்திற்குள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை நேரத்தில் கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதியுலா வந்தார்.
திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது
அதனைத்தொடர்ந்து நேற்று இரவு சுவாமி தங்கக்கைலாய பர்வதவாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து திருவிழாவின் உச்சமான தேரோட்டம் இன்று(ஜூலை.,2) நடைப்பெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சுவாமி-அம்பாள் பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளினர். காலை 8.15க்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட துவங்கியது. முதலில், விநாயகர், முருகர். அதன்பின்னர் நெல்லையப்பர் தேர், அதற்குப்பின் காந்திமதி அம்பாள்தேர் என வரிசையாக தேர்கள் இழுக்கப்பட்டது. திருவிழா காரணமாக திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் திரளான பக்தர்கள் சூழப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தேரினை வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.