Loading...
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பக்தர்களின் வசதிக்காக 305 சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்
திருச்செந்தூர் சூரசம்ஹார விழா பக்தர்களின் வசதிக்காக 305 சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பக்தர்களின் வசதிக்காக 305 சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6 ஆம் திருநாளான நவம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) மாலை 4 மணிக்கு மேல் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 7 ஆம் திருநாளான நவம்பர் 16 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

சிறப்பு பேருந்துகள்

மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களிலிருந்து 305 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருவதால், அவர்களின் பயண வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டல இயக்குநர் செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களும் மதுரை, நெல்லை, கோவில்பட்டி, பாபநாசம், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, தூத்துக்குடி, திசையன்விளை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 305 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பேருந்து வசதி

பக்தர்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கத் தயார் நிலை

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் தங்குவதற்கும் அடிப்படை வசதிகளுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவின் முக்கிய நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகளின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்ட 305 பேருந்துகளையும் தாண்டி மேலும் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ADVERTISEMENT

சிறப்பு ரயில்

நவம்பர் 15-ஆம் தேதி நெல்லை - திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

சிறப்பு பேருந்துகளைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சார்பிலும் பக்தர்களுக்காக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சூரசம்ஹாரம் நடைபெறும் நவம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கும், மறுமார்க்கமாகத் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரயில் மதியம் 3.20 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்குத் திருச்செந்தூரை சென்றடையும் என்றும், பின்னர் இரவு 7.30 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு நெல்லை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT