தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அது இன்று(டிச.,12)மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர்-சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்ததாக சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மனுதாரர் ஹென்றி திபன், ஒரேயொரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சி.பி.ஐ.தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையினை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி.அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கையினை அரசு ஏற்றுக்கொண்டப்பட்சத்தில் அந்த அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மேலும் அவர், முறையாக விசாரிக்காத சிபிஐ மீண்டும் இந்வழக்கை விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்றும், தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு இவ்வழக்கின் விசாரணையை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதிகள், ஒரேயொரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு மற்ற அதிகாரிகளுக்கு நற்சான்று வழங்கியது எப்படி? என்று சிபிஐ தரப்பிற்கு கேள்வியெழுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனில் 10 ஆண்டுகள் ஆகும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா? என்று விளக்கமளிக்க சிபிஐ'க்கு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.