
திருநின்றவூர் விசிக பெண் கவுன்சிலர் கொலை: கணவர் உட்பட மூவர் கைது
செய்தி முன்னோட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பெண் கவுன்சிலர் கோமதி (28) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது கணவர் ஸ்டீபன்ராஜ் உட்பட மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரே மனைவியை கொலை செய்த இந்த விவகாரம் அந்த வட்டாரத்திலும், அரசியல் தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், கணவர் ஸ்டீபன்ராஜூம் VCK கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள்
தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம், மோதல்கள்
திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (32) விசிக நகரச் செயலாளராகவும், அவரது மனைவி கோமதி, நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலராகவும், வரி விதிப்புக்குழுத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் கோமதிக்கும், அந்த அதே பகுதியில் வசிக்கும் இளைஞருக்கும் இடையே உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம், மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை
கொலை நடந்த சூழல்
நேற்று, ஜூலை 3ஆம் தேதி இரவு 11 மணியளவில், கோமதி, நட்டுகுத்தகை ஜெயராம் நகர் அருகே இருப்பதாக தகவல் பெற்ற ஸ்டீபன்ராஜ் தனது தம்பி அஜித் மற்றும் உறவினர் அந்தோணி உடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டீபன்ராஜ், பிறகு கட்டுப்பாட்டை இழந்து, தன்னிடம் இருந்த கத்தியால் கோமதியின் தலை, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் குத்தி செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி உயிரிழந்தார். இதையடுத்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபன்ராஜ், அஜித், அந்தோணி ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.