
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகை திருட்டு வழக்குக்கான விசாரணையில், அஜித் குமார் என்ற இளைஞர், அங்கீகரிக்கப்படாத தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் காவல் துறையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதிகள், "வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், யாரின் உத்தரவின்பேரில் அஜித் குமார் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டார்?" எனக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, டிஜிபி சங்கர் ஜிவால், தமிழகத்தில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனடியாக கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விவரங்கள்
உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே சிறப்புப்படை அமைக்கப்படவேண்டும்
மாவட்ட எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி. ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத சிறப்பு படைகள் கலைக்கப்பட்டு வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில், "வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப, சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளின் கீழ் மட்டுமே விசாரணைகள் நடக்க வேண்டும். எந்தவொரு விசாரணைக்கும் 35B நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் உடனடியாக கலைக்கப்பட வேண்டும். முக்கிய வழக்குகளுக்கு மட்டுமே, உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும்," என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.