வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
வருமான வரித் தாக்கலின் போது வருமான வரி கட்டாமல் விட்டாலோ அல்லது பாக்கி வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒருவர் வருமானத்தை குறைத்துக் காட்டினாலும் வருமான வரித்துறை நம் மீது நடவடிக்கை எடுக்கும். வருமான வரித் தாக்கலின் போது ஒருவருக்கும் வரக்கூடிய வருமானத்தை விட குறைவாக வருவதாக கணக்கு காட்டினாலோ அல்லது ஒருவருடை வருமானம் குறித்த தவறான தகவல்களை வருமான வரி தாக்கலின் போது அளித்திருந்தாலோ பிரிவு 270A-யின் படி அந்நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற தவறுகளே ஒருவர் தெரிந்தே செய்யவேண்டிய அவசியமில்லை, நாமே கூட தவறுதலாக மேற்கூறிய தவறுகளை செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, வருமான வரித் தாக்கலின் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
என்ன தண்டனை?
தனக்கு வரக்கூடிய வருமானத்தை விட குறைவாக வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிட்டிருந்தால், குறைவாகக் காட்டிய வருமானத்திற்கான வரியுடன் கூடுதலாக குறைவாகக் காட்டிய வருமானத்தில் 50% அபராதமாச் செலுத்த வேண்டும். குறைவாகக் காட்டிய வருமானத்தில் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால், குறைவாகக் காட்டிய வருமானத்தில் 200% அபராதமாகச் செலுத்த வேண்டும். வருமானம் குறித்த போதிய தகவல்களை குறிப்பிடாமல் இருப்பது, முதலீடுகள் குறித்த தகவல்களை கணக்குப் புத்தகத்தில் சேர்க்காமல் இருப்பது, போதிய ஆதாரங்கள் இன்றி செலவுகள் குறித்த தகவல்களைச் சேர்ப்பது, தவறான தகவல்களை கணக்குப் புத்தகத்தில் சேர்ப்பது ஆகியவை வருமானம் குறித்த தவறான தகவல்களைச் சேர்ப்பதாகக் கருதப்படுகிறது.