இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்திய மண்ணில் இருந்து உள்நாட்டு விண்வெளி வாகனத்தின் மூலம், விண்வெளிக்கு செல்லவிருக்கும் முதல் இந்தியர்கள் இவர்கள் ஆவர். இந்திய விமானப்படை அதிகாரிகளான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாடர் சுபான்ஷு சுக்லா ஆகியோரை பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த நான்கு விண்வெளி வீரர்களும் ரஷ்யாவில் விரிவான பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களை பற்றி மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்
ககன்யான் திட்ட இந்திய விண்வெளி வீரர்கள்
குரூப் கேப்டன் பிரஷாந்த் பாலகிருஷ்ணன்: கேரளாவின் திருவாழியாட்டில் பிறந்த பிரஷாந்த் பாலகிருஷ்ணன், நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவர். விமானப்படை அகாடமியின் பெருமைக்குரிய 'ஸ்வார்ட் ஆஃப் ஹானர்'-ஐ பெற்றுள்ளார். 1998ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இந்திய விமானப்படையின்(IAF) போர் விமானப்பிரிவில் நியமிக்கப்பட்ட பிரஷாந்த், முதல் ரக போர் விமான பயிற்றுவிப்பாளர் ஆவார். இவர் Su-30 படையின் கமாண்டர் ஆவார். குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்: சென்னையை சேர்ந்த அஜித் கிருஷ்ணன், கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம்தேதி சென்னையில் பிறந்தவர். இவரும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சிபெற்றவர் ஆவார். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் ஸ்வார்ட் ஆஃப் ஹானர்'-ஐ பெற்றுள்ளார்.
ககன்யான் திட்ட இந்திய விண்வெளி வீரர்கள்
குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிறந்த அங்கத் பிரதாப்பும், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா உத்தரபிரதேசத்தின் லக்னோவில், 1985 ஆம் ஆண்டு பிறந்த சுபான்ஷு சுக்லாவும், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். 2006 ஜூன் மாதம் 17ஆம் தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். சுமார் 2,000 மணிநேர பறக்கும் அனுபவம் கொண்ட விமானியான சுபான்ஷு சுக்லா பல்வேறு போர் விமான வகைகளை ஓட்டுவதில் பயிற்சி பெற்றவர். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த நால்வரும் விண்வெளிக்கு பயணப்படுவார்கள்.