4 ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்திய மண்ணில் இருந்து உள்நாட்டு விண்வெளி வாகனத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல இருக்கும் முதல் இந்தியர்கள் இவர்கள் ஆவர். இந்திய விமானப்படை அதிகாரிகளான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாடர் சுபான்ஷு சுக்லா ஆகியோரை பிரதமர் மோடி இன்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த நான்கு விண்வெளி வீரர்களும் ரஷ்யாவில் விரிவான பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டம் தற்போது இந்தியாவின் இஸ்ரோ பயிற்சி நிலையத்தில் நடந்து வருகிறது.
ககன்யான் பணியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த பிரதமர் மோடி
நான்கு விண்வெளி வீரர்களுக்கு கைத்தட்டல் அளித்து பாராட்டிய பிரதமர் மோடி, "விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மற்றொரு வரலாற்று பயணத்தை நாம் காண்கிறோம். இந்தியா தனது நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களை இன்று சந்திக்கிறது. இது நான்கு பெயர்கள் அல்ல, 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்து செல்லும் சக்திகள்" என்று தெரிவித்துள்ளார். அதோடு, விஎஸ்எஸ்சியில் ககன்யான் பணியின் முன்னேற்றத்தை பிரதமர் மோடி மதிப்பாய்வு செய்தார். மேலும் விண்வெளி வீரர்கள் குழு கேப்ஸ்யூலில் கால் வைப்பதற்கு முன்பு ககன்யான் மிஷன் மூலம் முதன்முதலில் ஏவப்பட இருக்கும் மனித உருவிலான ரோபோவான வயோமித்ராவுடனும் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.