வலிப்பு வந்தது போல நாடகமாடி தேனி கிளைச் சிறையை உடைத்து 17 கைதிகள் தப்பியோட்டம்
செய்தி முன்னோட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணை கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு 10 மணியளவில் தேனி கிளைச் சிறையின் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடியுள்ளனர். கைதியின் உடல்நிலையை பரிசோதிக்க சிறைக் காவலர்கள் அறைக்குள் சென்றபோது, திட்டமிட்டபடி கைதிகள் அனைவரும் சேர்ந்து காவலர்களை கொடூரமாகத் தாக்கினர். காவலர்களைச் நிலைகுலையச் செய்த கைதிகள், சிறை வளாகத்திலிருந்து தப்பி ஓடி அருகிலிருந்த வனப்பகுதியில் பதுங்கினர்.
தேடுதல் வேட்டை
17 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை
சம்பவம் குறித்துத் தகவலறிந்த தென் மண்டல காவல் ஐஜி விஜயேந்திர பிதாரி மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிறைக்குப் பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த ஒரு கைதி முதற்கட்டமாக பிடிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வரை மேலும் 3 கைதிகள் கைது செய்யப்பட்டு, பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தப்பியோடிய மீதமுள்ள 13 கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை, விருதுநகர் மற்றும் எல்லைப் பகுதியான கேரளாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னோட்டம்
தமிழகச் சிறைத்துறை வரலாற்றில் பரபரப்பான பின்னோட்டம்
கைதிகளின் தாக்குதலில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி தலையில் பலத்த காயமடைந்து தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரு காவலர்கள் லேசான காயமடைந்தனர்.
தமிழகத்தில் இதுபோன்று கைதிகள் குழுவாகத் தப்பிப்பது முதன்முறையல்ல.
கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையிலிருந்து தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த LTTE ஆதரவாளர்கள் 9 பேர் தப்பியோடியதும், அதே ஆண்டில் வேலூர் கோட்டைச் சிறையில் 153 அடி நீளத்திற்குச் சுரங்கம் தோண்டி 43 பேர் தப்பிய சம்பவமும் அரங்கேறியது நினைவுகூரத்தக்கது.