ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், முக்கியமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு, தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இரு மொழிக் கொள்கை, ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், மதுரையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் கிளையை நிறுவுவது மற்றும் அரசியல் தலையீடு இல்லாத நிர்வாக அமைப்பை உறுதி செய்வது போன்ற திட்டங்களையும் தவெக கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாநில பட்டியலில் கல்வி
கூடுதலாக, கல்வியை மீண்டும் பழையபடி அரசியலமைப்பில் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கும், கல்விக் கொள்கை முடிவுகளில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் சுயமாக இயங்குவதை வலியுறுத்தியுள்ளது. மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, மாநிலத்தின் போதைப்பொருள் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்களையும் தவெக தலைவர் விஜய் விளக்கினார். மொத்தத்தில், கல்வி, மாநில வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தவெகவின் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள், முத்துராமலிங்க தேவர், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவ படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.