தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: வெளிமாநில வாழ் தமிழக பெண்களுக்கு புதிய தளர்வுகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தகுதி விதிகளில் தமிழக அரசு முக்கியமான தளர்வுகளையும் புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. ஜூன் 22, 2026 முதல் அமலுக்கு வந்த இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான வரிசை எண்ணுடன் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருமணத்திற்கு பின் கணவருடன் வெளிமாநிலத்தில் வசித்து, பிரசவத்திற்காக தமிழகத்திலுள்ள தாய் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இச்சலுகை மறுக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன.
விதி திருத்தம்
தாய்மாமன் தங்க மோதிரம் பெறத் தகுதிகளும் ஆவணங்களும்
இதனையடுத்து அரசு வெளியிட்டுள்ள புதிய திருத்தத்தின்படி, தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அவரது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராயின் அக்குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இந்த விதிவிலக்கு ஜூன் 22, 2026 முதல் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும்.
தாய்மாமன் தங்க மோதிரம் பெற, குழந்தை கட்டாயம் தமிழக அரசு மருத்துவமனை, தாலுகா/மாவட்ட மருத்துவமனை அல்லது PHC-யில் பிறந்திருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட 12 இலக்க RCH ID / PICME பதிவு கட்டாயமாகும்.
தாயின் முகவரிச் சான்று (ரேஷன் கார்டு/வாக்காளர் அட்டை), PICME சான்று, மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு அல்லது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நடைமுறை
மோதிரம் பெறும் நடைமுறை
இத்திட்டத்திற்குத் தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது நிர்வாகமே ஆவணங்களைச் சரிபார்த்து மோதிரத்தை நேரடியாக வழங்கிவிடும்.
ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை ஏற்கனவே பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக அரசு அமைத்துள்ள 107 விநியோக மையங்கள் மூலம் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.