புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சி குழுமம் உலகின் டாப் 50 நிறுவனங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தங்களுடைய செயல்முறைகளில் புதுமைகளைக் கையாளும், நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களை டாப் 50-யாக பட்டியலிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
2003-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் டாப் 50 நிறுவனங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த டாடா குழுமம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தப் பட்டியலில் முதலிடத்தை வகித்து வருகிறது ஆப்பிள். அமேசான் நிறுவனமும் தொடர்ந்து டாப் 3 இடங்களைப் பெற்றிருக்கிறது.
இந்த வருடம் ஆப்பிள், டெஸ்லா மற்றும் அமேசான் ஆகிய மூன்று நிறுவனங்களும் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.
டாடா
எந்த நிறுவனத்திற்கு எந்த இடம்:
இந்த பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்திருக்கிறது டாடா குழுமம். மேலும், ஆல்ஃபபெட் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களையும், சாம்சங், மெட்டா மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள் 7, 16 மற்றும் 29-ம் இடங்களையும் பிடித்திருக்கின்றன.
உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த முதல் நிறுவனமாக சவுதி அராம்கோ நிறுவனம் முதல் முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
ஒரு நிறுவனம் தங்களின் செயல்பாடுகள் தொடங்கி, பணியாளர்களை தேர்ந்தெடுப்பது வரை அனைத்து செயல்களிலும் என்ன விதமான யுக்திகளை கையாள்கிறது, எப்படி புதுமைகளை புகுத்துகிறது என்பதை மையப்படுத்தியே இந்தப் பட்டியில் இருக்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது பாஸ்டன் கன்சல்டன்சி குழுமம்.