ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?
குன்னூர் அருகே கடந்த 2021ம்.,ஆண்டு டிச.8ம்.,தேதியன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான M1-17V5 என்னும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் மரணமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த மரணத்தினை சந்தேக மரணம் என்னும் பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை தங்கள் விசாரணையினை மேற்கொண்டனர்.
2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை
கடந்த 2 ஆன்டுகளாக நடத்தப்பட்டு வந்த விசாரணையினை தற்போது கைவிடுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. 174வது பிரிவின் கீழ் இவ்வழக்கினை பதிவுசெய்த குன்னூர் காவல்துறை, குறிப்பிட்ட அந்த நாளில் ஹெலிகாப்டர் இயக்க வானிலை அனுமதி கொடுக்கப்பட்டதா?என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். இதனிடையே ஹெலிகாப்டரின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர், ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் உள்ளிட்டவை கிடைக்காத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.
வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே காரணம் என அறிக்கை
இதற்கிடையே, பிபின் ராவத் மரணம் குறித்து விசாரிக்க முப்படை விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த குழு தனது விசாரணை அறிக்கையினை 2022ம் ஆண்டு ஜனவரியில் சமர்ப்பித்துள்ளது. அதில், வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்றும், இதுதவிர நாசவேலையோ, இன்ஜின் கோளாறோ காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கையினை ஆமோதித்த தமிழ்நாடு காவல்துறை
இந்நிலையில் இந்த அறிக்கையினை ஆமோதித்துள்ள தமிழக காவல்துறை, குறைந்த உயரத்தில் அடர்ந்த மேகங்கள் இருந்த பகுதியில் ஹெலிகாப்டர் சென்ற காரணத்தினால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ளது. எனினும், இதனை உறுதி செய்யவே ஹெலிகாப்டரின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர், ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் உள்ளிட்டவைகளை கேட்டிருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
தகவல்களை பகிர மறுத்த சூலூர் ராணுவ விமானத்தள அதிகாரிகள்
தொடர்ந்து, இதன் காரணமாகவே வெகு நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது என்றும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை இவ்வழக்கின் விசாரணையினை கைவிடுவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக இதுகுறித்த தகவல்களை பகிர மறுத்த சூலூர் ராணுவ விமானத்தள அதிகாரிகள், இவை அனைத்தும் பாதுகாப்பு ரகசியங்கள் கீழ் வரும் கூறியது என குறிப்பிடத்தக்கது.