
ரேபிஸ் விஷயத்தில் தாமதம் உயிருக்கு ஆபத்து: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நாய்களால் கடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் (Rabies) எனும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் தொற்றுக்கெதிரான வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடிக்கு உட்பட்டுள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் கேரளாவில், தடுப்பூசி பெற்றும் இரு சிறார்கள் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கையுடன் புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.
எச்சரிக்கைகள்
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு
ரேபிஸ் என்பது நாய்கள் உள்ளிட்ட வெறித்தனமிக்க விலங்குகளால் கடிக்கப்படும் போது பரவும் வைரஸ். ஒரு முறை அறிகுறிகள் தோன்றத் துவங்கினால், சிகிச்சை பலனளிக்காது - இது 100% மரணமளிக்கும் நோயாக கருதப்படுகிறது. தாமதமாக சிகிச்சை பெற்றாலும், தடுப்பூசி போட்டாலும் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும். கடிபட்ட இடத்தை சரியாக கழுவாததும், வைரஸ் உடலில் பரவ நேரம் தருகிறது. தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது உயிரை பணயம் வைக்கும் தவறு என சுகாதாரத்துறை எச்சரிக்கிறது.
செய்ய வேண்டியவை
கட்டாயமாக பின்பற்ற வேண்டியவை
நாய்க்கடியான உடனே, சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு 10-15 நிமிடங்கள் கழுவவேண்டும். இது வைரசின் தாக்கத்தை குறைக்கும் முதல் முக்கியமான நடவடிக்கையாகும். உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தில் Anti-Rabies Vaccine(ARV) செலுத்தப்பட வேண்டும். கடியின் ஆழத்தை பொறுத்து, RIG(Rabies Immunoglobulin)-வும் சில நேரங்களில் தேவைப்படும். முதல் ஊசி 24-48 மணி நேரத்தில் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும். தொடர்ந்து, மருத்துவர் பரிந்துரைக்கும் 4-5 டோஸ்கள் முழுமையாக செலுத்தப்பட வேண்டும். தெரு நாயாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் உள்ள செல்ல பிராணியாக இருந்தாலும் கடிக்கப்பட்டால் கூட உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.