மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மருத்துவத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இந்த வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மருத்துவத்துறை அறிக்கை
கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, தமிழக அரசின் மருத்துவத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு குழுக்களை உருவாக்க வேண்டும். பார்வையாளர்கள் நோயாளிகளை பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் மற்றும் பார்வையாளர்களுக்கு கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்துவதோடு, இரவுநேர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். கூடுதலாக, மருத்துவ பணியாளர்களை தாக்கினால், மருத்துவ பணியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான பதாதைகளை வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
#BREAKING | மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!#SunNews | #TNHospitals | #GovtHospitals | #TNDoctors pic.twitter.com/KDUaGwEzDv— Sun News (@sunnewstamil) September 2, 2024