தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது. கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இன்று மும்முரமாகத் தங்களது இறுதி கட்ட வலிமையைக் காட்டி வருகின்றனர்.
நான்கு முனைப் போட்டி
வரலாற்றுத் திருப்பம்
தமிழக அரசியலில் 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவி வந்த இருமுனைப் போட்டி இந்த முறை முற்றிலுமாக மாறியுள்ளது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) என நான்கு வலிமையான தரப்புகள் இம்முறை மோதுகின்றன. மொத்தம் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் வெற்றியைச் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
வாக்குச் சாவடிகள்
தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக 295 துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4.74 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்ததும், அடுத்த 48 மணி நேரத்திற்கு (ஏப்ரல் 23 மாலை 6 மணி வரை) 'அமைதி காலம்' அமலுக்கு வரும். ஊடகங்கள், தொலைக்காட்சிகள் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நாள்
ஏப்ரல் 23 - பொது விடுமுறை
வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, ஏப்ரல் 23-ஆம் தேதியைப் பொது விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்று தனியார் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் மற்றும் தேசியத் தலைவர்களான பிரதமர் மோடி, ராகுல் காந்தி எனப் பல முக்கியத் தலைவர்களின் தீவிரப் பிரச்சாரத்தால் தமிழகமே தேர்தல் ஜுரத்தில் தவித்து வரும் வேளையில், இறுதித் தீர்ப்பு மக்களின் கைகளில் உள்ளது.