வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி விரைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்புகளும், சாலைகளும் வெள்ளநீரால் சூழப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலியில் மழை ஓய்ந்த நிலையில், வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்புகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னமும் மக்கள் வெள்ளப்பாதிப்புகளில் இருந்து மீளவில்லை என்று தெரிகிறது. இம்மாவட்டத்தின் அருகேயுள்ள கோரம்பள்ளம் போன்ற பல்வேறு குளங்கள் கனமழை காரணமாக நிரம்பி, அதில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆறுகளிலிருந்த நீரும் நகரத்திற்குள் புகுந்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்
இதனால் தூத்துக்குடி நகரம் முழுவதும் நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச.,21)தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார் என்று தெரிகிறது. ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இன்று இரவு 9.25 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை வந்தடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது.