
கட்டுக்கடங்காத கூட்டத்தால் முன்கூட்டியே தொடங்கிய தவெக இரண்டாவது மாநில மாநாடு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை, பரபத்தி பகுதியில் உள்ள 506 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, ரசிகர்களின் பெரும் கூட்டம் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கே தொடங்கியது. மாநாட்டு அரங்கம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மேடையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தவெக நிர்வாகிகள், மற்றும் நடிகர் விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோருக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விஜய் பேச்சு
தவெக மாநாட்டில் விஜய் பேச்சு
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். இறுதியாக, தவெக தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தி மாநாட்டை நிறைவு செய்கிறார். மேலும், விஜய் 300 மீட்டர் தூரம் நடந்து சென்று கொடியேற்றும் முக்கிய நிகழ்வும் மாநாட்டில் இடம் பெறுகிறது. இதற்கிடையே, மாநாட்டில் துரதிருஷ்டவசமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த பிரபாகரன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.