தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுமதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக, கட்சிக் கொடி அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 அன்று நடத்த திட்டமிட்டு, அதற்காக அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். ஆனால், அந்த இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் அதற்கு அனுமதி கொடுக்க மாவட்ட காவல்துறை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு அனுமதி பெறும் நம்பிக்கையில் தவெக
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தை திமுக கடந்த ஏப்ரலில் இங்கு தான் நடத்தியுள்ளது. மேலும், 2021இல் அதிமுகவும் இங்கு கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வந்ததால் அது நடக்கவில்லை. இதனால், எப்படியும் இங்கு கூட்டத்தை நடத்தி விடலாம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். முன்னதாக, கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு இடம் கிடைக்காததால் மதுரை, சேலம், ஈரோடு போன்ற இடங்களில் கூட்டத்தை நடத்த ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அங்கெல்லாம் இடம் கிடைக்காததால், முதல் மாநாட்டை நடத்த தவெகவினர் திணறி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.