தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,'யும் என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆய்வு நூல் இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட படைப்பாகும். மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் இந்த விருது, இந்தியாவின் 24 பிராந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுவதாகும். இந்த விருதுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கமும், விருது சான்றிதழும் வழங்கப்படும். தமிழ் பேராசிரியருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்,"கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
Twitter Post
புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு
1908 மார்ச் 13-ஆம் தேதி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கைது செய்யப்பட்டதை அடுத்து, திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தடுக்க ஆங்கிலேய அரசு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நால்வர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், மேலும் மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது. இத்தகையதொரு புரட்சியை தமிழகம் இதற்கு முன்னர் கண்டதில்லை. இந்த புத்தகம், இந்த எழுச்சியின் போக்கை சான்றுகளுடன் விவரித்துள்ளது. வ.உ.சி. எடுத்த நிலைப்பாட்டையும், எழுச்சியில் பங்காற்றிய எளிய மக்களின் கதைகளையும் விரிவாக ஆராய்கிறது.