தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை: இன்று 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது 7 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று நவம்பர் 28 அன்று நீலகிரி கோயம்புத்தூர் கடலூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை இராமநாதபுரம் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேக பலத்த காற்றுடன் கனமழையும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மாவட்ட வாரியான முன்னறிவிப்பு
நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரையிலான மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு
நாளை நவம்பர் 29 அன்று நீலகிரி கோவை தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 30-ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் லேசான மழையும் நீடிக்கும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான அடுத்த 48 மணி நேர வானிலை
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் கணித்துள்ளது.
நகரின் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை சற்று பரவலாக பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை தமிழகக் கடலோர பகுதிகளுக்கு எந்தவித வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
ஆனால் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
அப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.