பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நியாய விலை கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு அடங்கிய தொகுப்பை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்கு விநியோகிக்க பச்சரிசியை கிலோ ₹32க்கும், சக்கரை கிலோ ₹40க்கும், முழு கரும்பு ஒன்று ₹33க்கும் கொள்முதல் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்
பொங்கல் பரிசுத் தொகுப்பு 2,19,57,402 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை நல்வாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ₹238.92 கோடியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹1,000 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பரிசுத்தொகுப்பு அறிவிப்பில் ரொக்கப் பணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், பரிசு தொகுப்பு எப்போது முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், அரசாணையில் இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகை இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.