ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்
மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வரவிருக்கும் ஜனவரி 5, 2025 உடன் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிகள் காலியாக உள்ளது. இந்த தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக, மாநில தேர்தல் ஆணையம் இதற்கு 45 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு பணிகளை தொடங்கும். ஆனால், இதற்கான அறிவிப்பு எதுவும் தற்போதுவரை வெளியிடப்படாததால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
வார்டு மறுவரையறைக்கு பின் தேர்தல்
தேர்தல் அட்டவணை மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், வார்டு எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதால், இந்த தாமதத்தை அரசு ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தாமதம் ஏற்படும் பட்சத்தில், நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, அவசரச் சட்டம் மூலம் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.