
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 7) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மற்றும் மீனவர்களுக்கான முன்னறிவிப்பு
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல், குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் அடுத்த நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.