தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம்
மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற பரிந்துரைத்ததாக அனுமானிப்பது "தவறானது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். "தமிழ்நாடு-தமிழகம்" என்ற கடுமையான விவாதத்திற்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய கருத்தை தெளிவுபடுத்திய ஆளுநர் ரவி, தனது பேச்சின் அடிப்படையை "புரிந்து கொள்ளாமல்" அனுமானத்தை சிலர் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். கடந்த ஜன 4ஆம் தேதி காசி-தமிழ்ச் சங்கமத்தின் தன்னார்வலர்களை பாராட்டும் விழா ஒன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில், "தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தால் தான் சரியாக இருக்கும்" என்று ஆளுநர் பேசி இருந்தார். அவரது அந்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழகம்-தமிழ்நாடு வார்த்தைகளால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து ஆளுநர் மாளிகை இன்று(ஜன:18) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல் சர்ச்சை
"தமிழ்நாடு மற்றும் காசி ஆகிய இரண்டுக்கும் இடையேயான வரலாற்றுப் பண்பாட்டுத் தொடர்பைப் பற்றிப் பேசும் போது, 'தமிழகம்' என்ற சொல்லைக் குறிப்பிட்டேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' இல்லை. எனவே வரலாற்று-கலாச்சார சூழலில், 'தமிழகம்' என்ற வார்த்தையே 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. மேலும், தமிழக முதல்வர் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியதும் முதல்வர் பேசி கொண்டிருக்கும் போதே ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, தற்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.