ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது
தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையின் முன்பு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் விடுதலை சிறுத்தை, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மூன்று மணி நேரம் அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த போராட்டம், தொல். திருமாவளவன் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயற்சித்தபோது பரபரப்படைந்தது. பாதுகாப்பை மீறி ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்ததால் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
என்ன நடந்தது?
சில நாட்களுக்கு முன்,சட்டமன்றத்தில் உரையை வாசிக்கும் போது சில வார்த்தைகளை ஆளுநர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது. இதை எதிர்த்து, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஜனவரி 13ஆம் தேதி நடக்கும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்தார். இந்த போராட்டத்தில் பேசும் போது, "கேரளா மற்றும் மேற்குவங்கம் போல் தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டமன்ற கூட்டம் நடைபெற வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது." என்று தொல். திருமாவளவன் கூறினார். மேலும், அவர் "ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம் நடத்தப்படும்" என்றும் அறிவித்தார். இதற்கிடையில், அவர் தடையை மீறி ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.