ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 9 அன்று நடைபெற்றது. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையுடன் தொடங்கி வைத்தார். ஆளுநரின் உரையின் போது தமிழ்நாடு, திராவிடம், அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின், "தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை." என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிராக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி பேசி முடிக்கும் முன்பே ஆளுநர் பாதியில் வெளியேறினார். ஒரு முதல்வர் பேசி கொண்டிருக்கும் போது ஆளுநர் வெளிநடப்பு செய்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அரசியல் தலைவர்களின் 'ரியாக்சன்'
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஆளுநரை வைத்துக்கொண்டே முதலமைச்சர் அப்படி பேசியது மரபுக்கு எதிரானது" என்று விமர்சித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு, "தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறி நாட்டை அவமானப்படுத்திவிட்டார்" என்று கூறி இருக்கிறார். இதை எதிர்த்து வரும் ஜனவரி 13ஆம் தேதி தங்கள் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகை செய்ய போவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். பாமக தலைவர் ராமதாஸ், "இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!" என்று குற்றம்சாட்டி இருக்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஆளுநர் உரையில் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அது ஒன்றும் திமுகவின் கட்சிக் கூட்டம் அல்ல" என்று விமர்சித்திருக்கிறார்.