தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, மாநில வரலாற்றிலேயே முதல்முறையாக 15 நாட்கள் 'தந்தையர் மகப்பேறுகால விடுப்பு' வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண் ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமான தருணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
15 நாட்கள் விடுப்பு எடுப்பதற்கான விதிமுறைகள்
புதிய அரசாணையின்படி, திருமணமான அரசு ஆண் ஊழியர்கள் தங்களது மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது.
இந்த 15 நாட்கள் விடுப்பினை, குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ தங்களது தேவைக்கேற்பப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தந்தையர் மகப்பேறு விடுப்பை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தற்போது முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆண் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.