
தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆகஸ்ட் 26 அன்று விரிவுபடுத்த உள்ளார். இந்த விரிவாக்கத்தின் மூலம், நகர்ப்புறங்களில் உள்ள 2,430 பள்ளிகளில் பயிலும் 3.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் சென்னையில் உள்ள மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கிவைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முதன்முதலில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியின் காரணமாக, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருக்குவளையில் மேலும் 30,992 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.
விரிவாக்கம்
கூடுதல் விரிவாக்கம்
2024ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டம் மாணவர்களின் வருகையை அதிகரித்ததுடன், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்கி, கற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது. ஒரு ஆய்வு அறிக்கையின்படி, இந்த திட்டத்தால் 90%க்கும் அதிகமான மாணவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு முன்பே புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் திரிபுராவில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தற்போது இந்த திட்டத்தை பின்பற்றி வருகின்றன. தற்போது நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதன் மூலம், இந்த திட்டம் தமிழகத்தின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டுகிறது.