ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ். ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய 20 நாடுகள் ஒன்றிணைந்த ஒரு குழுவாகும். இந்த 20 நாடுகளும் தங்களுக்குள் உள்ள பரஸ்பர வளர்ச்சி மற்றும் ஆதரவு குறித்து ஒவ்வொரு ஆண்டு ஜி20 மாநாட்டில் விவாதிக்கும். அப்படி நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.
முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எனவே, இந்தியாவில் வைத்து தான் இந்த மாநாட்டிற்கான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், முதல்வர் ஸ்டாலினும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பை ஏற்று வரும் செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, செங்கல்பட்டிற்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், அங்கு மத்திய அரசின் சதுப்பு நிலம் தொடர்பான மிஸ்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.