
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு எனத் தகவல்; புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறும் என தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
மேலும் கட்சியான ஆளும் திமுகவும், தேர்தலை மனதில் வைத்து குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது.
இதற்கிடையே, சில அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சைகளுக்கு பதிலாகவும் இந்த மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக, அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி, அவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட வழிவகுத்தது.
இருப்பினும் அமைச்சரவையில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்த நிலையில், அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலக வாய்ப்பு
அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் தனது அமைச்சர் பதவி தொடர்பான நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சிக்கலில் உள்ளார்.
மேற்கொண்டு சிக்கல் அதிகரிக்காமல் இருக்க, அவர் தானாகவே பதவியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்களின்படி, முக்கிய துறை மறு ஒதுக்கீடுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜியின் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் அவரது மதுவிலக்கு மற்றும் கலால் வரிப் பொறுப்புகள் அமைச்சர் முத்துசாமியிடம் செல்லக்கூடும்.
தற்போது பொன்முடியின் கீழ் உள்ள வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மீண்டும் ஒப்படைக்கப்படலாம்.
பதவியேற்பு
அமைச்சரவை மாற்றமும் பதவியேற்பும்
அமைச்சரவையில் இருந்து முன்னர் நீக்கப்பட்ட மனோ தங்கராஜ், பால்வள மேம்பாட்டுத் துறைக்கு மீண்டும் பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திட்டமிட்டதை விட முன்னதாக சென்னை திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவை நடத்தி வைக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றும் குறித்து தற்போதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை என்றாலும், அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலையில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.