சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு
சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில்கள், சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் என தாம்பரம் ரயில் முனையம் எப்போதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். லட்சக்கணக்கானோர் தாம்பரம் ரயில் நிலையத்தை தினமும் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கின. சிக்னல் மேம்படுத்துதல், நடைமேடை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் நடைபெற்றன.
பராமரிப்புப் பணிகள் நிறைவு
கிட்டத்தட்ட ஒரு மாதமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மின்சார ரயில்சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் தாம்பரத்தில் நின்று செல்லாததால், அங்கிருந்து வரும் பயணிகளும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், அங்கு நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த காரணத்தால், நாளை முதல் வழக்கம் போல் மின்சார ரயில்சேவைகள் எந்தவித தங்குதடையும் இன்றி கிடைக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால், சென்னை நகருக்குள் செல்ல பலரும், அங்கிருந்து தாம்பரம் வந்து மின்சார ரயில் சேவையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.