
ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத பந்தய செயலிகளை முழுமையாகத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங் மற்றும் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களை வலுவாக ஒழுங்குபடுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 23) ஒப்புக்கொண்டது.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதை தற்காலிகமாக ஒத்திவைத்தது.
சமூக ஆர்வலர் மற்றும் குளோபல் பீஸ் முன்முயற்சியின் தலைவர் என்று வர்ணிக்கப்படும் மனுதாரர், கட்டுப்பாடற்ற ஆன்லைன் பந்தயத்தால் சமூக மற்றும் நிதி பாதிப்பு அதிகரித்து வருவதை மேற்கோள் காட்டி இந்த மனுவை தாக்கல் செய்தார்.
திறன் சார்ந்த விளையாட்டுகள்
திறன் சார்ந்த விளையாட்டுகள் என்ற போர்வையில் மோசடி
இது பெரும்பாலும் ஃபேன்டஸி விளையாட்டுகள் அல்லது திறன் சார்ந்த விளையாட்டுகளாக காட்டிக் கொண்டு, மக்களுக்கு நிதி சார் இழப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு விரிவான மத்திய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
முந்தைய பொது சூதாட்டச் சட்டம், 1867 இன் கீழ் சீரான கட்டுப்பாடு இல்லாததூவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பந்தய செயலிகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் 25 பாலிவுட் பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் தெலுங்கானாவில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை மனு எடுத்துக்காட்டுகிறது.
தற்கொலை
கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை
தெலுங்கானாவில் ஆன்லைன் பந்தய தளங்களில் முதலீடு செய்து இழந்ததால், பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் 24 நபர்கள் தற்கொலை செய்து கொண்ட பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளது.
பொது நலன் சார்ந்த பிரச்சினையாக கருதி, இந்த பந்தய தளங்களால் இந்திய இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஏற்படும் அபாயங்களை மனுதாரர் வலியுறுத்தினார்.
பந்தயம் என்பது திறமைக்கான விளையாட்டு அல்ல, வாய்ப்புக்கான விளையாட்டு என்றும், எனவே இது சூதாட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது சில இந்திய மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம், ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தய தளங்களை தேசிய அளவில் ஒழுங்குபடுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது.