Loading...
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் அதிரடி திருப்பம்; உச்சநீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
தேர்தல் ஆணையத்தின் படிவம் 6 தொடர்பான முடிவுகளின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் அதிரடி திருப்பம்; உச்சநீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
02:08 pm

செய்தி முன்னோட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் அதிகாரப் பயன்பாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்கள் தொடர்பான முடிவுகளின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக பல வழிகாட்டுதல்களையும் மென்பொருள் மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு மாறாகச் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

விசாரணை

உச்சநீதிமன்ற அமர்வின் விசாரணைக் கருத்துகள்

இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மாலா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

சர்ச்சைக்குரிய முடிவுகள் தலைமைத் தேர்தல் ஆணையரால் தனிச்சையாக எடுக்கப்பட்டதா அல்லது தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய ஆவணங்கள் தேவை என அமர்வு தெரிவித்தது.

"படிவம் 6-ல் மாற்றங்களைச் செய்தது யார் என்பதை ஆவணங்களைப் பார்த்தே முடிவு செய்ய முடியும். தேர்தல் ஆணையத்தில் ஒருமித்த கருத்து இல்லாதபோது முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். வெறும் செய்தித்தாள் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் உத்தரவிட முடியாது" என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

வாதம்

வழக்கில் மூத்த வழக்கறிஞரின் காரசார வாதம்

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும் இந்த செய்தி மறுக்கப்படவில்லை என்றும், நீதிமன்றம் தலையிடாவிட்டால் நிலைமை மோசமடையும் என்றும் வாதிட்டார்.

அத்துடன், தேர்தல் ஆணையத்திற்குப் பதிலளிக்க ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, நியமன முறையிலோ அல்லது முடிவுகளிலோ தவறு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், தேர்தல் முடிவுகளையே ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எப்போதும் ஒருமனதாக எடுக்கப்படுவதை உறுதி செய்யத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT